புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

கவிதை என்பது எல்லா காலத்திற்க்கும் பொதுவான  ஒன்று அதுல என்ன புதுக்கவிதை, பழைய கவிதை என்று கேட்பது புரியுது சரி  புதுக்கவிதை பற்றி தெரிந்து கொள்வதற்க்கு முன்னர்  யாப்பு இலக்கணம்பற்றி தெரிந்து கொள்வது நலம்.
 
யாப்பு இலக்கணம் :
யாத்தல் என்னும் சொல்லுக்குக் கட்டுதல், பிணைத்தல், தளைத்தல் என்று பொருள். குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில், எழுத்து, அசை, சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். இவ்வுறுப்புகள் தகுந்த முறையில் பிணைக்கப்படுவதால் இவ்விலக்கணத்தை யாப்புஎனும் பெயரால் குறித்தனர். செய்யுளுக்குரிய உறுப்புகள் ஓர் ஒழுங்கமைதியோடு கட்டப் பெறுகின்றன. யா என்னும் வினையடிச் சொல்லிலிருந்து இச்சொல் வந்தது. செய்யுள் குறிப்பிட்ட ஓர் ஓசையைப் பெறும் வகையில் செய்யுள் உறுப்புகள் சேர்த்து அமைக்கப் பெறுகின்றன. யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பு இலக்கணம் பற்றி ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் . சரி புரியாவிட்டாலும் விட்டிருங்க . எல்லாவற்றையும்  சொல்லி உங்களை குழப்ப விரும்பல்ல. இப்போ நாம புதுக்கவிதை பற்றி பார்க்கலாம் .

புதுக்கவிதை :                             
                  இந்த யாப்பு இலக்கண கட்டுபாட்டுகளுக்கு அடங்காமல் கைவிலங்கு அகற்றப்பட்டு  சுதந்திரமாக எழுதப்படும்  கவிதைகளுக்கு புதுக்கவிதைகள் எனப்பெயர் . யாப்பின் இலக்கண கட்டுப்பாட்டில் அடங்கும் மரபுக்கவிதையிலிருந்து  விடுபட்டுப் புதிய வானில் சிறகடித்தப் பறவைகளே புதுக்கவிதைகள். தமிழில்  நமக்கு புதுக்கவிதையை அறிமுகபடுத்தியவர்  ந. பிச்சமூர்த்தி ஆவார் . புதுக்கவிதையின் ஆதிக்கம் 1970 இல்  வானம் பாடிக் கூட்டத்தினர் எழுதிய பின்னரே ஏற்பட்டது .
                           

ஆங்கில மொழியில்  வால்ட் விட்மன் என்பவர்  தான் புதுக்கவிதையை  தொடங்கி வைத்தார் . புல்லின் இதழ்கள் (leaves of Grass) என்பதுதான் அவரது முதல் படைப்பு . டி .எஸ் . எலியட் எழுதிய பாழ் நிலம்  (Waste Land) என்ற புதுக்கவிதை நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது மிகப்பெரிய எழுச்சியாக அமைந்தது. சொல்லவந்த கருத்தை நேரடியாக சொல்லுதல் , நறுக்கென்று சொல்லவந்ததை சுருங்கச்சொல்லுதல். இசை நீட்சி  இவைகள் தான் இதன் சிறப்பு அம்சம். வெள்ளைக்காரர்கள் இவ்வகையை விடுதலைக் கவிதை  (Free verse) என்று கூறுவர் .

புதுக்கவிதை 
என்பது 
சொற்கள் கொண்டாடும் 
சுதந்திரதின விழா!

 மரபுக்கவிதைகள் -
மண்ணில் இருந்தாலும் 
விண்ணையே பார்த்துக்கொண்டிருக்கும் 
மலர் வர்க்கங்கள்!

புதுக்கவிதைகளோ 
விண்ணிலிருந்தாலும் 
மண்ணையே  பார்த்துக்கோண்டிருக்கும் 
சூரிய  சந்திரர்கள்!

யாப்பின் அரியாசனத்தில்  
கொலுவிருப்பதால் மட்டுமே 
செத்த வார்தைகளுக்கு 
வெண்சாமரங்கள் 
வீச முடியாது !

என்ற வைரமுத்துவின் வரிகளில் புதுக்கவிதையின் பெருமையை காணலாம்.

ஐக்கூ: (துளிப்பா)
                          ஜப்பான் நாட்டு சென் மதத்தினர் பாடிய ஹொக்கு என்ற ஒரு வகையே ஹைக்கு, ஐக்கூ  என்று  நாம் நாட்டிலும் பரவியது . இது மூன்று அடிகளால் பாடும் குறுங்கவிதையாகும். இதன் மூன்றாவது அடி , முதல் இரண்டு அடிகளின் பொருளை அதிரடியாய் திசை திருப்பும்: சாட்டையடி போல் மனதை இறுக்கும். படித்த பொறியாளர் முதல் சாதாரண தொழிலாளி வரை பலரும் ஐக்கூ எழுதி வருகின்றனர். கணினியுகத்தில் நீண்ட நெடிய கவிதைகளைப் படிக்க நேரமும், பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் இந்த மூன்று வரி முத்துக்களான ஐக்கூ கவிதைகளை எல்லோரும் விரும்பிப் படிக்கின்றனர். ஐக்கூ கவிதைகளுக்கு வயது வரம்பு இன்றி அனைத்துத் தரப்பினர்களிலும் வாசகர்கள் உண்டு. கவிதை ரசிகர்கள் என்ற சின்ன வட்டத்தையும் தாண்டி பரவலாக பலராலும் படிக்கப்படும் வடிவம்தான் ஐக்கூ.
                         ஆர்.எச்.பிளித் என்பவர் ஐக்கூ வைப்பற்றி கூறுகையில் இவ்வாறாக விவரிக்கிறார் :    
"பாறைகளுகுள்ளே ஒளிந்திருக்கும் சிலையை உளி கண்டுபிடிக்கிறது. ஐக்கூவும் அப்படியே சொற்களுக்குள் உள்ள கவிதையைக் கண்டுபிடிக்கும். சொற்கள் தொடக்கமே; முடிவல்ல."
"இறுகிக் கிடக்கும் ஒரு மலர்மொட்டின் மெல்லிய இதழ்களைக் கதிரவனும் மழையும் எவ்வாறு விரிய வைக்கின்றனவோ அவ்வாறு காட்சியின் பொருளை வெளிக் கொணர்வதேயாகும்."
உதாரணமாக கவிஞர் அமுதபாரதி எழுதிய ஐக்கூ :
                         மழை சூடாக இருக்குமா ? என்ற கேள்வியை எழுப்பி, எப்போது சூடாக இருக்கும்என்று விடையைச் சொல்லி காட்சிப்படுத்துகிறார் கவிஞர்.
                                                  பேருந்து நிறுத்தம்
                                                  சூடாய் மழை
                                                  பக்கத்தில் அவள் 
 
சென்ரியூ:  (நகைப்பாக்கள்)
                      சென்ரியும்  மூன்றடிகளால் பாடும் ஐக்கூ போன்றதே . எனினும் நகைச்சுவையும் எள்ளலுமாக பாடப்படுவது சென்ரியூ இதனை நகைப்பாக்கள் அல்லது நகைத்துளிப்பா என்றும் அழைப்பர் .
 உதாரணமாக கவிஞர் மாமதயானை எழுதிய  நகைத்துளிப்பா:
                                             நன்றியுள்ள நாய்
                                            வாலை ஆட்டியது
                                            திருடனுக்கு 



நகைத் துளிப்பாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள கவிஞர் ஈரோடு தமிழன்பன்  இப்படியாக எழுதுகிறார்:
                         மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெருமக்களே,  தாங்கள் கூடும்   பொதுச்சபையில் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?  
                                         சட்டம் ஒழுங்கைக்
                                        காப்பாற்ற முடியவில்லை
                                        சட்டசபையில்
 
லிமரைக்கூ :(இயைபுத் துளிப்பா)
                          மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத்தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா அல்லது லிமரைக்கூ என்பர் . இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.


                       ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பார்கள். உலகில் தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர்வாழ்வெல்லாம் இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர். தரமாகக் கவிதை எழுதியிருந்தும், எதுகைமோனை வரம்போடு எழுதுவதுதான் கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க முயன்றதாக, கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.
                                                  கவிதை எல்லாம் விற்றான்
                                                  கைக்கு வந்த காசைக் கொண்டு
                                                  தேமா புளிமா கற்றான்


 இன்றைய மக்களின் ஆங்கில விருப்பத்தையும் ஆங்கிலத் திரைப்படங்கள் தமிழ் விளக்கங்களுடன் வருவதையும் சீனு.தமிழ்மணி நமக்கு இவ்வாறாக நினைவூட்டுகிறார்.
                                                         
                                               ஆங்கிலம் பேசும்
                                               தமிழ்க்குழந்தை
                                               தமிழ்பேசும் ஆங்கிலப்படம்!
இவைகளை தவிர இன்னும் இரண்டு துளிப்பாக்கள் உள்ளன :
அவைகள் :
ஐபுன் - (உரைத் துளிப்பா)
ஐக்கா - (ஓவியத் துளிப்பா) 
இவைகளைப்பற்றி  இனிவரும் நாட்களில் காணலாம் .....                  
                                                                                                                                                  (தொடரும் )........
இந்த தொகுப்பினை என் பள்ளி நாட்களில் தமிழை சுவாசிக்க கற்றுகொடுத்த எங்கள்  தமிழ் ஆசான்   கே. பச்சைமால் அவர்களுக்கு  சமர்பிக்கிறேன்.
இவரை பற்றி சில சுவாரசியமான துளிகள் : அதுவரையில் பாகற்காய் போல் கசந்துகொண்டிருந்த தமிழ் இலக்கணம் இவர் வகுப்பில் மட்டும்  இனிக்க ஆரம்பித்தது. நன்கு பழுத்த கொய்யாப்பழம் இவரது நிறம் , நீலம் அதிகம் கலவாத வெள்ளை வெளீர் என்ற  வேஷ்டியும் ,சட்டையும். சட்டைப்பையில் ஒரு பச்சை நிற ஹீரோ பேனா. தமிழ் மரபிற்க்கிணங்க வெற்றிலை, பாக்கு சுவைத்து கோவை பழ நிற உதடுகள்.  வெற்றிலை, ரோஜா பாக்கு சுவைக்கும் பழக்கம் இருந்தும் ஒரு நாள் கூட வகுப்பறையில்  உபயோகித்ததில்லை. ஒரு நாள் கூட பட புத்தகத்தை வைத்து பாடம் நடத்தியது கிடையாது. எல்லாமே அவரது சுவாசங்களில் .. அந்த வெற்றிலை சுவையை உறிந்துகொண்டு  சொல்லும் போதே எல்லாம் எங்கள் நினைவறையில்  பதிவாகியிருக்கும் . அவ்வளவு இனிமையாகவும் எளிதாகவும் பாடம் நடத்துவார் . அதனால் தான் இனித்ததோ என்னவோ. அந்த மர்மம் இன்னும் விளங்கவில்லை..
        : இந்த தொகுப்பானது என் ஆசான் என்னில் பதிய வைத்த  சிறு நினைவுகளின் துணை கொண்டு  பல்வேறு நூல்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் மற்றும் கூகுளின் துணை கொண்டு தொகுக்க பட்டுள்ளது.  ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி நவில வேண்டுமென்றால் ஒரு தனி பதிவே எழுதவேண்டும் .. எனவே அனைத்து  ஆசான்களுக்கும் எனது பணிவான குரு வந்தனமும்! மனமார்ந்த நின்றியினையும்! தெரிவித்துக்கொள்கிறேன். 

கருத்துகள்

தமிழ் மீரான் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி! என சந்தேகங்கள் பல தீர்ந்தன.
Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
Hello, யார் அது? ப்ரின்சா? விண்வெளியில் சுற்றி கொண்டிருந்த நீங்கள், கவிதை இலக்கணம் சொல்லி தர வந்துட்டீங்க..... வாழ்த்துக்கள்!
Mahi_Granny இவ்வாறு கூறியுள்ளார்…
இத்தனை வகைகள் இருக்கா. எனக்கு எல்லாமே புதிதாய். பதிவுலகில் வந்து நிறைய தெரிந்து கொள்கிறேன். எழுதுங்கள் மக்களே
நாடோடி இவ்வாறு கூறியுள்ளார்…
க‌விதைக‌ளின் விள‌க்க‌ம் அருமை பிரின்ஸ்... ஆமா எந்த‌ ப‌ள்ளியில் ப‌டித்தீர்க‌ள் ?..
பிரேமா மகள் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தமிழ் வாத்தியாரே!!!!1
prince இவ்வாறு கூறியுள்ளார்…
திகழ் has left a new comment on your post "உயிர் வலி":

அருமை
prince இவ்வாறு கூறியுள்ளார்…
@நாடோடி: கார்மல் மேல்நிலைப்பள்ளி. ராமன்புதூர் அருகில், நாகர்கோயில்.
பனித்துளி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
தாமதமாக பதிவு தந்திருந்தாலும் மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . கவிதைகள் பற்றிய பல தெளிவான விளக்கங்களுடன் கூடிய அருமையான படைப்பு . அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமையும் . பகிர்வுக்கு நன்றி
ப்ரியமுடன் வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
பெஸ்ட் ஆஃப் லக் பாஸ்...

//மரபுக்கவிதைகள் -
மண்ணில் இருந்தாலும்
விண்ணையே பார்த்துக்கொண்டிருக்கும்
மலர் வர்க்கங்கள்!

புதுக்கவிதைகளோ
விண்ணிலிருந்தாலும்
மண்ணையே பார்த்துக்கோண்டிருக்கும்
சூரிய சந்திரர்கள்!//

மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான விளக்கம் பிரமிப்பு...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு
ரசித்தேன்
ஜானகிராமன் இவ்வாறு கூறியுள்ளார்…
விரிவான, பயனுள்ள பதிவு நண்பா. இடையிடையே உதாரணமாக பயன்படுத்திய கவிதை வரிகள் மிகச்சிறந்தவை.
மரா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லபல விளக்கங்கள். நன்றி நண்பரே.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விளக்கங்கள் ..

//ஆங்கிலம் பேசும்
தமிழ்க்குழந்தை

தமிழ்பேசும் ஆங்கிலப்படம்!//

மிகவும் ரசித்த ஹைக்கூ..
அகல்விளக்கு இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாயிருந்தது நண்பா...

நிறைய விசயங்களை அறிந்துகொண்டேன்...
prince இவ்வாறு கூறியுள்ளார்…
கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
வால்பையன் இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்ளோ விசயங்கள் இருக்கா!
நான் இன்னும் ஆனா ஆவன்னாவுலயே இருக்கேனே!
தமிழ்த்தோட்டம் இவ்வாறு கூறியுள்ளார்…
பல தகவல்களை பெற்று கொண்டேன் பயனுள்ள பதிவுக்கு நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துறவறம் துறந்த துறவியின் கதை !

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா